அஜீரணம்

அஜீரணம்(indigestion)
என்று பொதுவாக கூறப்பட்டாலும் அதன் சரியான மருத்துவ பதம் Dyspepsia என்பதே. அதே போல அஜீரணம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அதற்கு தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் நோய் கணிப்பு ‘‘செரியாமை’’ என்பதே. ‘‘டாக்டர் எனக்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமே ஆக மாட்டேங்குது…, வயிறு உப்புன மாதிரி இருக்குது…. ஏப்பம் ஏப்பமா வருது…, அடிக்கடி
விக்கல் எடுக்குது…’’ என செரியாமையின் குறிகுணங்கள் அனைத்தையும் நோயாளியே தெளிவாக கூறி விடுவதுடன் எனக்கு அஜீரணம், அதற்கு மருந்து கொடுங்கள் என்று நோயையும் அவரே கணித்து விடுவார். நோயாளி தனது பிரச்னையை கூறிய உடனேயே இது செரியாமை தான் என்று கூறி விடலாம். என்றாலும் உடனே அந்த முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இந்த பிரச்னை அவருக்கு எப்போது ஆரம்பித்தது. அவரது உணவு முறைகள் என்னென்ன, அவரது அன்றாட பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதையும் முழுமையாக தெரிந்து கொண்டுதான் மேற்கொண்டு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது என்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்ய வேண்டும் அஜீரண தொந்தரவு கிட்டதட்ட 80% பேருக்கு இருக்கிறது. ஆனால் சில பேருக்கு மட்டுமே தொந்தரவின் தீவிரம் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாக உள்ளது. பேரும்பாலானோர் அதோடு வாழப்பழகிக் கொள்கிறார்கள்.
அஜீரணம் வருவதற்கான காரணங்கள்:
முதலில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அஜீரணம் சிறு பிரச்னையாகவும் வரலாம் அல்லது வேறு ஒரு பெரிய நோயின் தொடர்பாகவும் வரலாம். நல்ல உடல் நிலையில்
உள்ளவர்களுக்கும் அஜீரணம் வரலாம். பொதுவாக எளிதில் சேரிக்காத உணவுகளாகிய கொழுப்பு, மீன், கறி, கீரை வகைகள் போன்றவற்றை ‘‘அண்ணி சமைத்தாலே தனி டேஸ்ட் தான்’’ என்று கூறிக்கொண்டே அளவுக்கு அதிகமாக ஒரு பிடிபிடித்தால் பாவம் வயிரு என்ன செய்யும்?
அது போக, எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் சரி சிறிதளவாவது கெட்டு போயிருந்தாலும் அதைத் தொடவே கூடாது. வீணாகி விடுகிறதே என்று பல தாய்மார்கள் சாப்பிட்டு விடுவார்கள்.
இது வயிற்றை பாதித்து அஜீரணத்தை உண்டுபண்ணும். அதைப் போல மாவுப் பொருட்களால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக உண்பதாலும் அஜீரணம் ஏற்படும். மேலும் நேரம் தவறி உணவு உண்பதாலும் சீரான கால இடைவெளியில் வயிறு இயங்காமல் ஒழுங்கற்று இயங்கி அஜீரணத்தை உண்டுபண்ணும். இதை தான் நம் பாட்டன் அன்றே
‘‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல தூய்க்க துவரப் பசித்து’’ என்றான். இந்த இடத்தில் வாசகர்கள் திருக்குறளை எடுத்து, அதில் மருந்து எனும் அதிகாரத்தில் வரும் பத்து குறள்களையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் அந்த பத்து குறள்களையும்
கடை பிடித்தாலே போதும், வாழ்க்கை முழுவதும் அஜீரணப் பிரச்னையே இருக்காது.
அஜீரணம் எந்த வயதினருக்கு வரலாம்?
பெரியவர்களுக்கு தான் அஜீரணப் பிரச்னை இருக்கும் என்று இல்லை. பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி, தாத்தா வரை எந்த வயதினரையும் இது பாதிக்கலாம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அஜீரணப் பிரச்னை காணப்படலாம்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்:
குழந்தைகளுக்கு வயிறு பொருமல், வயிறு உப்பி காணப்படுதல், குடித்த பால் எதிரெடுத்தல் போன்ற குறிகுணங்களைக் கொண்டு இதனை கணிக்கலாம். மருந்து வெள்ளைப் பூண்டு 5 திரியெடுத்து அதன் தோல் நீக்கி விட்டு அதை சட்டியிலிட்டு இளவறுப்பாக வறுத்து அதனுடன் 4 கிராம் ஓமத்தைச் சேர்த்து அது வெடிக்கும் போது அதில் 85 மி.லி. நீர் சேர்த்து சரி பாதியாக காய்ச்சி குடிக்கக் கொடுக்க வேண்டும்.
(1_3) வயது குழந்தைகள்:
1 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அஜீரணத்தை சித்த மருத்துவத்தில் ‘‘மாந்தம்’’ என்று அழைப்போம். மாந்தம் வரும் காரணங்கள் மிகவும் நுணுக்கமானது. குழந்தை
என்ன உண்டது என்பதை விட குழந்தைக்கு பாலூட்டும் தாய் என்ன உணவை உண்டார் என்பது இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. குழந்தைக்குப் பாலூட்டும் தாய்மார்கள் சிலர் உணவுகளை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
_ பருகும் குடிநீர் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
_ எருமைப்பால், புளித்த மோர், நெய், வாழைப்பழம், தேங்காய்,
இளநீர், கடலை, வெல்லம், மொச்சைக் கொட்டை, மாவுப் பொருள்கள், வாயு பொருள்கள் இவைகளை அதிகம் உண்ணக் கூடாது.
_ மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதை என்றாலே ‘‘என்ன ஆச்சு… குழந்தை அழுது, நீ குழந்தையா இருந்தப்ப அதுதான் கொடுத்தேன்…’’ என்று நாம் அனைவருக்கும் பிரபலமான அந்த
மருந்து ‘‘ஓமகுடிநீர்’’ என்ற சித்த மருந்தே ஆகும். இதைப்போல சித்த மருத்துவத்தில் இன்னும் அநேக மருந்துகள் உள்ளன. அந்த மருந்துகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில மருந்துகளின் பெயர்களைத் தருகிறேன். ஒருமுறை வாசித்தாவது விடுங்களேன். முக்கடுகு குடிநீர், பூவரசு குடிநீர், திப்பிலிஎண்ணெய், கோரோசனை மாத்திரை, கஸ்தூரி எண்ணெய், கொடிவேலி குடிநீர், குப்பைமேனிசாறு, நொச்சிசாறு, வேலிப்பருத்தி சாறு, பொடுதலை சுரசம், வெற்றிலைக்காம்பு கற்கம், குறோட்டை கற்கம் (தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தால் இந்த இடத்தில் ஒரு விளம்பர இடைவேளை விடலாம்) வேளைக்குடிநீர், ஓமாதி உருண்டை, வாய்விளங்க உருண்டை, பூரமாத்திரை, உத்தாமணி நெய், அகத்தி எண்ணெய், சண்பகப் பூ குளிகை, ஓமப்பொடி, பூண்டெண்ணெய், கோழிகல்லீரல் கல் அரைப்பு, உத்தாமணி சாறு, காட்டுமல்லிகை எண்ணெய், ஆமைஓடு கருக்கு குடிநீர், சத்திசாரணை எண்ணெய், சீந்தில் குடிநீர், தும்பை சூரசம் (அப்பாடா…கொஞ்சம் இளைப்பாறி கொள்ளுங்கள், இன்னும் எத்தனையோ மருந்துகளை சொல்லலாம் ஆனாலும் ஒரு அறிமுகத்திற்காகத் தான்
ஒரு சில மருந்துகளை இங்கே குறிப்பிட்டேன்.)
(3_7) வயது குழந்தைகள்:
3 முதல் 7 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் அஜீரணத்தை சித்த மருத்துவத்தில் ‘‘கணம்’’ என்று குறிப்பிடுகிறோம். இதற்கும் பக்கவிளைவில்லாத மருந்துகள் அனேகம் உள்ளன அவைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று முறையாக பயன்படுத்தலாம்.
செரியாமைக்கான பல்வேறு காரணங்கள்(inbox or colour):
– மேல்வயிறு தொடர்பான காரணங்ள்
_ குடல்புண்
_ பித்தப்பை கற்கள்
_ உணவுக்குழாய்கள் தசைகளில் ஏற்படும் பிரச்னைகள்
= வேறு காரணங்கள்
_ கணையம் தொடர்பானவை
_ கல்லீரல் தொடர்பானவை
_ பெருங்குடல் புற்றுநோய்
_ சிறுநீரகம் செயலிழத்தல்
_ இரத்தத்தில கால்சியம் அளவு அதிகரித்தல்
= செரியாமையை ஏற்படுத்தும் மருந்துகள்
_ NSAID – வலி மருந்துகள்
_ இரும்பு மற்றும் பொட்டாசியம் சேர்ந்த மருந்துகள்
_ ஸ்டீராய்டுகள்
_ டிஜாக்சின்
_ ஆல்ஹகால்
மன நோய்கள்
மன அழுத்தம், மன சோர்வு போன்ற மன சம்பந்தப்பட்டம் நோய்களாலும் அஜீரணம் ஏற்படும்.
இதனை சரி செய்வதற்கு மருந்துகளால் முடியாது பிரச்னைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதை சரிசெய்வதே தீர்வாக இருக்கும்.
செரியாமைக்கான பரிசோதனைகள்
55 வயதுக்கு மேல் திடீரென அஜீரண பிரச்னையை சந்திப்பவர்கள் கண்டிப்பாக மேற்கொண்டு சில பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியிருக்கும் அதைப் போல எந்த வயதினராக இருந்தாலும் அஜீரணத்திற்காக தொடர்ந்து சிகிச்சையெடுத்தும் மருந்து மாத்திரை சாப்பிட்டும் எந்த பலனும் இல்லாதவர்களும் மேற்கொண்டு சில பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். மேலும் கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் மேற்கொண்டு சில பரிசோதனைகளை
செய்ய வேண்டியிருக்கும்
_ உடல் எடை குறைதல்
_ இரத்த சோகை
_ அடிக்கடி வாந்தி எடுத்தல்
_ இரத்த வாந்தி எடுத்தல்
_ உணவு விழுங்க முடியாமை
_ தொட்டுப் பார்த்தால் வயிற்றின் எந்தப் பகுதியிலாவது கட்டி போல காணப்படுதல்.
மேற்கண்ட நிலைகளில் உள்ளவர்கள் எண்டோஸ்கோப்பி (வாய் வழியாக குழாயை செலுத்தி வயிற்றைப் பரிசோதிப்பது) செய்து கொள்வது நல்லது.